சர்க்கரை நோயாளியா நீங்க? அப்போ இதை செய்யுங்க..
சர்க்கரை நோய், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது இன்றைய இளம் தலைமுறையினருக்கு கூட பிரச்னையாக மாறிவிட்டது. சர்க்கரை நோய் வரலாம் என்று தெரிந்தும் உணவுக் கட்டுப்பாடு இன்றி இருந்தவர்கள், சர்க்கரை நோய் வந்த பிறகு கட்டுப்பாட்டைக் கண்டு மிரட்சி அடைகின்றனர். சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய கஷ்டமான காரியம் இல்லை. கூடுதல் கவனத்துடன் செயல்பட்டாலே போதும் சர்க்கரையை வெல்ல முடியும்.
மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கு பதில் 5 – 6 வேளை உணவைப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ள வேண்டாம். இது ஒரே நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக சென்றுவிட காரணமாகிவிடும். காலை 8 மணிக்கு சாப்பிடுகின்றீர்கள் என்றால், மதியம் 12 – 1 மணிக்கு மதிய உணவு சாப்பிடுவீர்கள். இப்படி செய்வதற்கு பதில், காலை உணவை இரண்டாக பிரித்துக்கொள்ள வேண்டும். நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் என்றால், எட்டு மணிக்கு இரண்டு இட்லி சாப்பிடலாம். 10 மணிக்கு இரண்டு இட்லி சாப்பிடலாம். இப்படி செய்வதன் மூலம் இன்சுலின் செயல்திறன் மேம்படும்.
அசை போடுவது பசி உணர்வைக் கட்டுப்படுத்த உதவும். எனவே, பபிள்கம் சாப்பிடுவது மிகவும் சரியானதாக இருக்கும். சுகர் ஃப்ரீ பபிள் கம்மை போட்டு மென்று கொண்டே இருந்தால் உணவு மெல்வது போன்ற உணர்வு இருக்கும். பசி உணர்வும் குறைந்துவிடும்.
காலையில் காபி, டீ அருந்தும் பழக்கம் இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள். அதற்கு பதில் மூலிகை காபி, தேநீர் அருந்தலாம். காபி குடித்தே தீர வேண்டும் என்று உந்துதல் உள்ளவர்கள் சர்க்கரை இல்லாத காபி, டீ அருந்தலாம். இப்படி செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிப்பது தடுக்கப்படும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று வழக்கமான உணவுக்கு பதில் ஒரு வேளையை காய்கறி, பழ சாலட்க்கு விட்டுவிடுங்கள். இது மிகப்பெரிய அளவில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். பழங்களைத் தேர்வு செய்யும் போது கவனம் தேவை. அதிக சர்க்கரை உள்ள பழங்களைச் சாப்பிட வேண்டாம்.
இவற்றுடன் உடற்பயிற்சிக்கும் நேரத்தைச் செலவிடுங்கள். காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து சிறிது நடைப்பயிற்சி செய்யுங்கள். இரவு தூங்கச் செல்வதற்கு
முன்பும் உடற்பயிற்சி செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கலோரி எரிக்கப்படும்.