கரை தட்டிய கப்பல்: பதட்டத்தில் உலக நாடுகள் காரணம் என்ன?
(ஆதாரம்:பிபிசி, இந்து தமிழ் ) சூயஸ் கால்வாயில் பக்கவாட்டில் சிக்கியுள்ள கப்பலால் உலகே பதட்டத்திலும் பரபரப்பிலும் உள்ளது. கப்பல் சிக்கினால் ஏன் பரபரப்பு என நினைப்பவர்களுக்குசிக்கியது கப்பல் மட்டுமல்ல, உலக பொருளாதாரத்தின் ஒரு பிரிவும்தான். ஐரோப்பாவிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் செல்வதால் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் குறைகிறது.
தெற்கு அட்லாண்டிக் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் பாதையில் செல்வதோடு இந்தப் பாதையை ஒப்பிட்டால் சுமார் 7,000 கிலோமீட்டர் பயணம் மிச்சாமாகிறது. சர்வதேச வர்த்தகத்தில் முக்கியமான ஒரு நீர்வழிப் பாதையாக கருதப்படும் சூயஸ் கால்வாயை அடைத்துக்கொண்டு `ராட்சத கப்பல்` ஒன்று தரைத்தட்டி நிற்கிறது.

கால்வாய் மார்க்கத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல லட்சம் மதிப்புள்ள சரக்குகள் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது இது சதியா, தற்செயலாக நடந்த விஷயமா, அல்லது வரப்போகும் பெரிய நடவடிக்கைக்கான முன்மொழிவா என பலர் வியப்பில் உள்ளனர்.
சீனாவிலிருந்து நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்கு இந்த கப்பல் சென்றபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த கப்பலில் உள்ள ஊழியர்கள் 25 பேர் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த பகுதியில் கடும் மணல் புயல் வீசியுள்ளது. இதனால் கப்பல் மாலுமிகளால் வழியை கூட சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடுமையாக வீசிய புயல் காற்றிலிருந்து கப்பலை காப்பாற்ற மாலுமி முயன்றாரே தவிர கப்பல் செல்லும் வழியை கண்காணிக்காமல் விட்டுவிட்டார். இதனால் கப்பல் மணல் பரப்பில் சிக்கியுள்ளது. உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் சிக்கியுள்ள கப்பலால் ஏற்பட்ட நெரிசலை சரி செய்ய நான்கு அம்ச திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

193 கி.மீ நீளமுள்ள கால்வாய் மத்தியதரைக் கடலை செங்கடலுடன் இணைக்கிறது. ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய கடல் இணைப்பை இது வழங்குகிறது. செவ்வாயன்று சூயஸ் கால்வாயில் 224,000 டன் கொள்கலன் கொண்ட கப்பல் சிக்கி நீர்வழிப்பாதையில் போக்குவரத்தை முற்றிலுமாக தடுத்துள்ளது.
இதன் காரணமாக பல சரக்கு கப்பல்கள் அந்த பாதையை கடந்து செல்ல முடியாமல் நிற்கின்றன. இவற்றில், எண்ணெயைக் கொண்டு செல்லும் கப்பல்கள் முதல் நுகர்வோர் பொருட்களை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் வரை பல வித கப்பல்கள் உள்ளன. சூயஸ் கால்வாயில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலால், உலக வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பாதை, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்தும், அந்த பகுதிகளுக்கும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்தப்படுகிறது என்று அமைச்சகம் மேலும் வெளிப்படுத்தியது. தற்போதைய நிலவரப் படி சிக்கிய கப்பல் இன்னும் அதே நிலையில்தான் உள்ளது. டக்போட்கள் மற்றும் அகழி கருவிகள் வைத்து அதை நகர்த்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கப்பல் எப்போது நகர்ந்ததப்படும், பாதை எப்போது சரியாகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
