கரூரில் நிகழ்ந்த சோகம்: கட்டிலில் படுத்திருந்த மூதாட்டி மழை வெள்ளத்தில் சிக்கி பலி
கரூரில் பெய்த கனமழையின் காரணமாக மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் வாட்டி வந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் திடீரென சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் கரூர் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பழைய திண்டுக்கல் ரோடு, வெங்கமேடு, காந்திகிராமம், தான்தோன்றிமலை, திருக்காம்புலியூர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதனிடையே கரூரை அடுத்த தெரசா கார்னர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வரும் காளியம்மாள் என்ற 80 வயது மூதாட்டி கன மழையின் காரணமாக அப்பகுதியில் ஓடும் கால்வாய் நீரில் சிக்கி உயிரிழந்தார். ஆனால் கட்டிலில் படுத்திருந்த மூதாட்டி மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மூதாட்டி பலியான சம்பவம் கரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.