கணவன் கொடுமையால் மனைவி தற்கொலை..குழந்தைகளுக்கு எலி மருந்து கொடுத்து கொன்ற பரிதாபம்!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்ப தகராறில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்தவர்கள் முருகேசன் - நித்யா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளான நிலையில் 6 வயது மகளும், 4 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவி நித்யா கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீடான மணப்பாறை அருகேயுள்ள பொன்னம்பலத்தான்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 30ஆம் தேதி கணவர் வீட்டுக்கு சென்ற அவர், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால், தாய் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
மனமுடைந்த நிலையில் இருந்த அவர், தனது குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து தங்களது தற்கொலைக்கு தனது கணவரும் அவரது சகோதரியுமே காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் திருமணம் செய்த அன்றில் இருந்தே தன்னை கொடுமை செய்து வந்ததாக கூறியுள்ள அவர், சொத்துக்காக தனது குழந்தைகளையும் கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தங்களது சொத்துக்களை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைக்க வேண்டும் என்றும், கணவருக்கு வீடு கட்ட மட்டும் நிலம் ஒதுக்கி தர வேண்டும் எனவும் எழுதி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.