மனைவியை கைவிட்ட மோடி அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்வதா? சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை!
பிரதமர் மோடி குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ராமர் கோயில்
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு இதற்கான கட்டுமான பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மும்முரமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2024 ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் கோவில் கர்ப்பகிரஹத்தில் (கருவறை) ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. கருவறையில் வைக்கப்படும் ராமர் சிலையை பிரதமர் மோடி எடுத்து வந்து பூஜை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சுப்பிரமணியன் சாமி
இந்நிலையில் பிரதமர் மோடி ராமர் கோவிலில் பூஜை செய்ய பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ராமர் ஏறக்குறைய 15 ஆண்டுகள் போராடி தனது மனைவி சீதையை மீட்டார். இப்படியான சூழலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடியை பிரதிஷ்டை பூஜை செய்ய ராமர் பக்தர்களான நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
ஏனென்றால் மோடி தனது மனைவியை கைவிட்டவராக அறியப்படுகிறார். இப்படி இருக்கும்போது அவர் தான் பூஜை செய்வாரா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.