பட்டா மாற்றத்திற்கு ரூ. 25,000 லஞ்சம் - துணை வட்டாட்சியர் அதிரடி கைது!
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய முசிறி மண்டல துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
லஞ்சம் வாங்கிய அதிகாரி
திருச்சி மாவட்டம் முசிறியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (40). இவரின் தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும், காலியிடமும் உள்ளது.
இந்த இரண்டு இடங்களுக்கும் பட்டா கோரி கடந்த பிப்ரவரி மாதம் முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் மனு அளித்துள்ளார். பின்னர் விஏஓ மூலம் முசிறி மண்டல துணை வட்டாட்சியர், ஆர். தங்கவேலு என்பவரை கடந்த நவம்பர் மாதம் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணனின் இடத்தை பார்வையிட்ட துணை வட்டாட்சியர் தங்கவேலு, ரூ. 25,000 கொடுத்தால்தான் பட்டா பெற்றுத் தர முடியும் என்று கூறியுள்ளார்.
அதிரடி கைது
இதற்கு விரும்பாத கிருஷ்ணன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூ.25,000 பணத்தை துணை வட்டாட்சியர் தங்கவேலிடம் கொடுக்க கூறியுள்ளனர்.
பின்னர் நேற்று மாலை கிருஷ்ணனிடம் இருந்து லஞ்ச பணத்தை அவர் பெற்றபோது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் துணை வட்டாட்சியர் தங்கவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.