“தண்டனை கொடுக்க வேண்டாம் என கூறி மதவெறியை மண்டியிடச் செய்திருக்கிறார் வீரப்பெண் முஸ்கான்” - மக்களவையில் சு.வெங்கடேசன் பேச்சு

karnataka loksabha hijabcontroversy suvenkatesanspeech
By Swetha Subash Feb 10, 2022 06:01 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

‘மதவெறியை மண்டியிட செய்த வீரப்பெண், முஸ்கான்’ என மதுரை எம்.பி. சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி அங்கும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பர்தா அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய முற்பட்டப்போது

அந்த மாணவியை முற்றுகையிட்டு சக மாணவர்கள் பின்தொடர்ந்து போய் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர்.

அத்தனை மாணவர்களுக்கு மத்தியில் தனி ஆளாக போராடிய மாணவி பதிலுக்கு ‘அல்லாஹு அக்பர்’ என ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மாணவிக்கு ஆதரவு பெருகியது.

இதுகுறித்து மக்களவையில் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில்,

“பணமதிப்பிழப்பு தொடர்பாக பிரதமரை கிண்டல் செய்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறி, ஒன்றிய இணையமைச்சர் அவரே ஒரு புகாரை கேட்டு வாங்கி, அந்த தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இன்றைய தினம் கர்நாடகாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?, ஹிஜாப் அணிவதை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல் மாணவ சமூகத்தையே கூறு போட்டு கொண்டிருக்கிறது.

தன் வயதை ஒத்த மாணவர்களோடு கலந்துரையாடி சமூகமயமாக வேண்டிய மாணவ சமூகத்தினுடைய முன்னுரிமையை குலைக்கிறது.

சிறார்கள் தலையிலே கிரீடம் அணிவதும் மாணவிகள் ஹிஜாப் அணிவதும் இவர்களுடைய உத்தரவின்பேரில்தான் நடக்க வேண்டுமா?

பள்ளிக் குழந்தைகள் என்ன நாடகம் போட வேண்டும் என்பதும் மாணவ சமூகம் என்ன ஆடை அணிய வேண்டும் என உத்தரவிட இவர்கள் யார்? என கேள்வி எழுப்பினார்.

தஞ்சை பள்ளி மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் காரணமாக இருக்குமோ? மர்மம் காரணமாக இருக்குமோ? என சொல்லி அவசர அவசரமாக தேசிய குழந்தைகள் ஆணையம் தமிழகத்திற்கு விரைகிறது.

ஆனால் கர்நாடகாவிற்கு எந்த ஆணையமும் விரையவில்லையே ஏன்? சிறார்கள் நடத்திய நாடகத்தின் மீது ஒன்றிய அமைச்சகம் உடனடியாக தலையீடு செய்கிறது.

ஆனால் கர்நாடகா பிரச்சினையே பேச இந்த அவையில் நேரம் ஒதுக்க மறுக்கிறீர்களே அது ஏன்? என்ற கேள்வியை கேட்க நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

துண்டு துணியை வைத்து எங்களது கல்வி உரிமையை பறிக்க விடமாட்டோம் என முழங்கியிருக்கிறார் வீரப்பெண் முஸ்கான்.

சக மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டாம்; அவர்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்தாலே போதும் என்று முஸ்கான் தெரிவித்துள்ளார்.

இந்த வார்த்தை மத வெறியை மண்டியிடச் செய்யும் வார்த்தை. இந்த வார்த்தை மாணவியின் வார்த்தை அல்ல, ராமனின் வார்த்தை, நபிகளின் வார்த்தை,

ஏசுபிரானின் வார்த்தை, மதவெறியை மண்டியிடச் செய்ய மனிதன் கற்றுக் கொடுத்த மகத்தான் வார்த்தை. இந்த அவை முழுக்க இந்த வார்த்தைகள் எதிரொலிக்க வேண்டும்” என பேசினார்.

இதற்கு பாஜக எம்பிக்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.