படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் : கொந்தளித்த ஓபிஎஸ்

ADMK DMK
By Irumporai May 14, 2022 09:23 AM GMT
Report

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்தது ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுரை மாநகர மேயரின் கணவர், உறவினர்கள், அடியாட்கள் மட்டுமல்லாமல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில், அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ அல்லது அடியாட்களோ தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஏற்கெனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 34-வது வார்டு பெண் கவுன்சிலர் திருமதி ஷர்மிளா காந்தி அவர்களின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கவுன்சிலர் அலுவவகத்திற்கு வந்து மக்களை மிரட்டுவது போன்ற வீடியோவும், தாம்பரம் மாநகராட்சி 31-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர் திருமதி எம். சித்ரா தேவி என்பவரின் மைத்துனர் தனது ஆதரவாளர்களுடன் சென்று உணவுக் கடை உரிமையாளரை மிரட்டியது போன்ற புகாரும் வெளிவந்த நிலையில் இதனைக் கண்டித்து நான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன்.

இந்த நிலையில், தற்போது மதுரை மாநகராட்சியில், மேயர் திருமதி வி. இந்திராணியின் கணவர் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது, மேயரின் கணவர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஆதிக்கம்தான் மாநகராட்சியில் ஓங்கி இருக்கிறது என்றும், அவர்கள் தான் மேயர் அலுவலகத்தையே ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், மக்கள் பிரச்சனை உட்பட அலுவலகம் சார்ந்த தகவல்களை இவர்களை மீறி மேயரிடம் எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகசெய்திகள் வெளியாகின.

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களுக்குப் பதிலாக அவர்களது கணவன்மார்களும், உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல். ஒருபுறம் பெண்ணுரிமையைப் பற்றி பேசிக் கொண்டு, மறுபுறம் பெண்ணடிமையை ஊக்குவிப்பது என்பது “படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

ஒருவேளை இதுதான் “திராவிட மாடல்” போலும் என கூறியுள்ள ஓபிஎஸ் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் வீட்டை மட்டும் ஆண்டு வந்த பெண்கள் இன்று நாட்டையும் ஆளத் தொடங்கியுள்ள நிலையில், அவர்களை பொம்மையாக வைத்து, ஆண்கள் செயல்படுவது என்பது மகளிருக்கு எதிரான, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயல்.

ஆகவே மதுரை மட்டும் அல்ல, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில், அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ அல்லது அடியாட்களோ தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.