+2 பொதுத்தேர்வு நிறைவு; புத்தாநத்தம் அரசினர் மேல்நிலைப் பள்ளியை சூறையாடிய மாணவர்கள்
புத்தாநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் வகுப்பறையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற்றன.
பொதுத்தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் நேற்று பிரிவு உபசார விழாக்கள் நடைபெற்றன.
பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவர்கள்
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 320 பேர் எழுதினர். இங்கு நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் (ஏப்.3) உடன் நிறைவு பெற்றதை அடுத்து பள்ளியில் உள்ள 17 வகுப்பறையில் இருந்த பேன், சுவிட்ச் போர்டு, லைட் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.