நீட் தேர்வு; மாணவர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

Tamil nadu Government of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi
By Thahir Sep 08, 2022 09:59 AM GMT
Report

பள்ளி மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்ட காலத்தை தற்போது தான் உடைத்துள்ளோம். நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நீட் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மக்களை சந்தித்த அமைச்சர் 

சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சனைகளை மாவட்ட ஆசியர்களிடம் மனுவாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மக்கள் பிரச்சனைகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனுவாக வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருவெறும்பூர் தொகுதியில் பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அவற்றை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இலவச திட்டங்கள் என்பது சமூக நீதிக்கு தொடர்புடையது. அதை வெறும் இலவசம் என பார்க்க கூடாது சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்கவே இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் 

நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது குறித்த கேள்விக்கு, இரண்டாண்டுகள் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடியிருந்த நிலையில் தற்போது தான் அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு; மாணவர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் | Students Should Be Confident Minister Anbil

மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்ட காலத்தை தற்போது தான் உடைத்துள்ளோம். அவர்கள் பள்ளி சூழலுக்கு மீண்டும் தற்போது தான் தயாராகி உள்ளார்கள். மாணவர்கள் வருங்காலத்தில் இன்னும் அதிகமாக படிக்க வேண்டும்.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் நாம் உறுதியாக உள்ளோம் அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம். தன்னம்பிக்கையை மாணவர்கள் இழந்து விட கூடாது. எந்த தவறான முடிவுகளை மாணவர்கள் எடுக்க கூடாது.

நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து சட்ட போராட்டங்களையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. ஒன்றிய அரசிடம் தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் கிடைக்காமல் இருக்க பள்ளி வளாகங்கள் சுற்றி அவ்வப்போது கண்காணித்து வருகிறோம். யாரேனும் போதை பொருட்களை விற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.