காய்கறிகள் விற்று படிப்புக்கு பணம் சேர்க்கும் பள்ளி தஞ்சாவூர் மாணவர்கள்
திருவையாறு அருகே தங்களது படிப்புக்காக மாணவர்கள் சிலர் காய்கறி விற்று பணம் சேர்த்து வைக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு என்பதால் கடந்த ஓராண்டாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் முடங்கியுள்ள சிறுவர்கள் மொபைலில் கேம் விளையாடவும் டிவி பார்த்தும் நேரம் செலவழித்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாரை அடுத்த மேலத்திருப்பந்துருத்தியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் தங்களுடைய குடும்பத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கட்டும் என்று தங்களது படிப்புக்காக உதவும் வகையில் மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கி தெருத் தெருவாகச் சென்று சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அவர்களின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அப்பகுதி பொதுமக்கள் தங்களது ஆதரவையும் அளித்து வருகின்றனர்.