பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை வெளியே அமர்த்திய பள்ளி நிர்வாகம்
சேலத்தில் பள்ளி கட்டணம் செலுத்தாத 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியே அமர்த்தி தனியார் பள்ளி நிர்வாகம் வகுப்பு எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் காந்திரோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் ஒன்றாவது முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டாவது நாளான இன்று கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அனுப்பி,
பள்ளி வளாகத்தில் உள்ள உணவு உட்கொள்ளும் அறையில் அமர்த்தி வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளிக்கு கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், வெளியே அமர்த்தி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வெளியில் அமர்ந்து இருந்த பள்ளி மாணவர்கள் அனைவரையும் வகுப்புக்குள் பள்ளி நிர்வாகம் அனுப்பிவைத்தது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அமர்த்தி வகுப்புகள் எடுத்த சம்பவம் சேலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.