இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மாணவர்கள் சேர்ந்து பார்க்க வேண்டாம் : என்ஐடி அறிக்கை
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதலை காண்பதற்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் அணி போட்டி
ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது, இந்த நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) இன்று நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் :
பல்வேறு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் மாணவர்கள் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொண்டு, எந்த விதமான ஒழுங்கீனத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஒன்றாக அமர்ந்து பார்க்க வேண்டாம்
இன்று போட்டி நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல மற்ற மாணவர்கள் யாராவது அறைகளுக்குள் வந்தால் அனுமதிக்கக் கூடாது.
போட்டியை மாணவர்கள் குழுக்களாகப் பார்க்க அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அறை யாருக்கு ஒதுக்கப்பட்டதோ அந்த மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அங்கிருந்த மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சமூக வலைத்தளங்களில் கூட போட்டி தொடர்பான எந்தவொரு தகவலையும் பகிர வேண்டாம் என்று கூறப்பட்டு உள்ளது.