பேருந்தின் கூரையில் ஏறிய மாணவர்கள்... தட்டிக்கேட்ட கண்டருக்கு அடி உதை
சென்னை திருவொற்றியூரில் அரசுப் பேருந்தின் கூரையின் மீது ஏறிய மாணவர்களை கண்டித்த கண்டக்டரை தாக்கிவிட்டு சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை பாரிமுனையை அடுத்த வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து எண்ணூர் நோக்கி தடம் எண் 56 கொண்ட சென்னை மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்து திருவொற்றியூர் எல்லை அம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டபோது சில மாணவர்கள் ஓடிவந்து ஏறி படியில் நின்றுகொண்டனர். அப்போது பேருந்து ஓட்டுநர் மாணவர்களை பார்த்து படிக்கெட்டில் இருந்து பேருந்துக்குள் வருமாறு கூறினார்.
இதனை கேட்காத மாணவர்கள் பேருந்தின் கடைசி இருக்கையின் ஜன்னல் மீது காலை வைத்து பேருந்தின் கூரை மீது ஏற முயன்றனர். இதை பார்த்த பயந்து போன பெண்கள் மாணவர்களை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். ஆனால் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
மாணவர்கள் கீழே விழுந்தால் உயிர் தப்பாது என்பதால் நடத்துநர் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறினார். உடனே பேருந்து நிறுத்தப்பட்டது. மீண்டும் பேருந்து புறப்பட்டபோது மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டே சாகசம் செய்துள்ளனர். மீண்டும் பேருந்து நிறுத்தப்பட்டது.
மேலும் பேருந்துக்குள் நீங்கள் வந்தால்தான் போகமுடியும் என்று கண்டக்டர் கூற ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கண்டக்டரை சரமாரியாக அடித்துவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. இதை அடுத்து பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் கண்டக்டரிடம் புகாரை வாங்கிக் கொண்ட பின் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.