காதல்ன்னா சும்மா இல்ல...சுவர் ஏறிக் குதித்து காதலனை திருமணம் செய்த மாணவி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கழிவறை செல்வது போல் வந்து சுவர் ஏறிக் குதித்து காதலனை திருமணம் செய்துள்ளார் மாணவி ஒருவர்.
பள்ளி காலம் முதல் தொடங்கிய காதல்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள சென்னிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 21 வயதாகும் இவர் பக்கத்து ஊரான கரவிளாகம் பகுதியைச் சேர்ந்த அனிஷ் என்ற 24 வயது வாலிபரை நீண்ட ஆண்டாக காதலித்து வந்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ராதிகாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனீஸ் 10 ஆம் வகுப்பு படித்த நிலையில் படிப்பை நிறுத்தி விட்டு எலெக்ட்ரீசியன் வேலைக்கு சென்றுள்ளார். ராதிகா தற்போது கருங்கல் பகுதியில் உள்ள கல்லுாரி ஒன்றில் பி.எஸ்.சி 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
அனீஸ் வெளிநாடு சென்று எலெக்ட்ரீசியன் வேலைக்கு சென்று பணியாற்றி வரும் நிலையில் ராதிகா தொடர்ந்து அலைபேசி மற்றும் வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலம் தங்கள் காதலை தொடர்ந்து வந்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேற திட்டம்
இந்த நிலையில் அனீஸை மணம் முடிப்பதில் ராதிகா உறுதியாக இருப்பதைப் பார்த்து விட்டு அவரது வீட்டில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். கூடவே ராதிகாவுக்கு வேறு மாப்பிள்ளைப் பார்க்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து ராதிகா, வெளிநாட்டில் இருந்த அனீஸிடம் தனக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உடனே அனீஸ் வெளிநாட்டில் இருந்து கன்னியாகுமரி வந்தார். இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ராதிகா தனது வீட்டை விட்டு வெளியேற திட்டம் போட்டுள்ளார்.
சுவர் ஏறிக் குதித்து திருமணம்
இதையடுத்து ராதிகா கழிவறை செல்வதாக கூறி வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் சுவர் ஏறி குதித்து பைக்கில் காத்திருந்த அனீஸ் உடன் தப்பி சென்று கரவிளாகம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தங்களது மகளை காணவில்லை எனக் கூறி ராதிகாவின் பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல்நிலையத்திற்கு இருவரும் மாலையும், கழுத்துமாக வந்ததை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ராதிகா மேஜர் என்பதால் போலீசார் அறிவுரை வழங்கி திருப்பி வைத்தனர்.