காதலியை சூட்கேஸில் அடைத்து வைத்த காதலன் - என்ன காரணம் தெரியுமா?
காதலியை சூட்கேஸில் வைத்து மறைத்து தனது விடுதி அறைக்கு கொண்டு செல்ல மாணவன் சிக்கிக்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது..
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இரவு கல்லூரி மாணவன் தனது விடுதிக்குள் பெரிய சூட்கேஸ் ஒன்றை மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து வந்துள்ளார்.
சூட்கேஸ் வீக்கமாக இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் மாணவனை தடுத்து விசாரித்திருக்கிறார். ஆனால் காப்பாளரை பார்த்தவுடன் சற்று அதிர்ச்சியடைந்த மாணவன் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளான். சூட்கேஸில் விலையுயர்ந்த பொருட்கள் இருப்பதாக மென்று விழுங்கி பதிலளிக்க காப்பாளருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.
உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தால் விடுவேன் என காப்பாளர் கறாராக சொல்ல வேறு வழியே இல்லாமல் சூட்கேஸை மாணவன் திறந்துள்ளார். அப்போது உள்ளே இருந்து ஒரு பெண் வெளியே வர அதைப் பார்த்த காப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தனது காதலி நன்றாக நடனம் ஆடுபவர் என்பதால் உடலை சூட்கேஸுக்குள் சுருட்டி படுத்துக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். மேலும் அந்த மாணவியும் அதே கல்லூரியில் பயின்று வருபவர்தான் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.