ஒரு முட்டை தோசைக்காக தற்கொலை செய்த இளைஞர்
ஆந்திராவில் முட்டை தோசைக்கு பெற்றோர் பணம் கொடுக்காததால் இன்ஜினியரிங் மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாக்கால மண்டலம் தலாரிவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாய் கிரண் என்ற இளைஞர் சித்தூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்லும் வழியில் காலை உணவுக்காக முட்டை தோசை வாங்கி சாப்பிட பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் பணம் தர மறுத்ததால் விரக்தி அடைந்த அவர் கிராமத்தையடுத்த ஒரு குளத்தில் குதித்துள்ளார்.
அதற்குமுன் தனது நண்பர்களுக்கு இந்த குளத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பெற்றோருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.
பதற்றமடைந்த பெற்றோர் ஒவ்வொரு குளமாக தேடிச் சென்ற நிலையில் எங்கும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஆணின் பிணம் மிதப்பதாக அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அளித்த தகவலின்பேரில் கிராமத்தினர் அங்கு சென்று குளத்தில் இறங்கி மாணவர் சாய்கிரணை பிணமாக மீட்டனர்.
இதுதொடர்பாக பாக்கால காவல் துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முட்டை தோசைக்காக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.