மாணவி சத்யா கொலை வழக்கு: குற்றவாளியை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த சதீஷை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா (வயது 20) என்ற இளம்பெண், கல்லூரிக்கு செல்வதற்காக 13ம் தேதி மதியம் 12.00 மணிக்கு பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, அந்தப் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்த சதீஷ் என்ற இளைஞர் பின் தொடர்ந்துள்ளார். அத்துடன், தன்னை காதலிக்குமாறு பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், இளம்பெண்ணைத் தள்ளி விட தண்டவாளத்தில் விழுந்த பெண் மீது மின்சார ரயில் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே இளம்பெண் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கு காரணமான சதீஷ் என்ற இளைஞரை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில் கொலை நடந்த அன்று இரவே சதீஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு சில நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இதற்கிடையே சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்ட நிலையில் ஒருநாள் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது