கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்
வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து நண்பர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வீராங்கனை கால் அகற்றம்
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா இவருக்கு வயது 17. இவர் சென்னை ராணிமேரி கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். மாணவி பிரியா தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு சாதனைகளை படைத்து வந்தார்.

இந்த நிலையில், அண்மையில் மாணவியின் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்துார் அரசு புறநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு செய்த பரிசோதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
மருத்துவர்கள் சஸ்பெண்ட்
இதன் பின்னர் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
உயிரிழந்த மாணவி பிரியாவின் உடலை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பிரியா உடலை கொண்டு செல்லும் வாகனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் சங்கர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பெரியார் நகர் அரசு மருத்துமனையின் எலும்பு முறிவுத்துறை உதவிப் பேராசிரியராக இருந்து வருகிறார் பால்ராம் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.