அச்சுறுத்தும் நீட் : 2வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் மாயம் - பதற்றத்தில் பெற்றோர்கள்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நீட் தேர்வினை இரண்டாவது முறை எழுதிய மாணவர் விக்னேஷ், தேர்ச்சி பெற முடியாது என்ற விரக்தியில் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கெந்தரை கிராமத்தை சார்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் மதன் இவரது மனைவி அம்பிகாவதி இவர்களுக்கு 19 வயதில் விக்னேஷ் என்ற மகன் உள்ளார். விக்னேஷ் கடந்த வருடம் நீட் தேர்வு எழுதுவதற்காக தனது தாய் அம்பிகாவதியுடன் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரில் வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
கடந்த வருடம் எழுதிய நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் விக்னேஷ் நீட் தேர்வு எழுதிய நிலையில் சோகமாக இருந்து வந்துள்ள நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து விக்னேஷ் திடீரென வெளியேறினார்.
விக்னேஷ் மாயமானதால் அவரது தாயார் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது அவரது படுக்கையறையில் விக்னேஷ் பன்னிரண்டு முப்பது மணிக்கு தனது டைரியில் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில்:
அப்பா அம்மா; நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க இயலாது இந்த முறையும் நீட் தேர்வில் ஏமாற்றம்தான் உண்மையை கூற எனக்கு பயமாக இருக்கிறது .
இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பதற்கோ , உங்களை அப்பா அம்மா என்று அழைப்பதற்கோ எனக்கு தகுதி இல்லை சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் வீட்டை விட்டு செல்ல முடிவு செய்துள்ளேன்.
இன்று நான் என் வெற்றிப் பாதையை நோக்கி வெகுதூரம் செல்கிறேன் என்னை தேட வேண்டாம் இன்னும் சில வருடங்களில் திரும்பி வருவேன் வெற்றி பெற்றவனாக இது சத்தியம் என்று எழுதி வைத்துச் சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த அவரது தாயார் அம்பிகாவதி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காணாமல் போன மாணவன் விக்னேஷை தேடி வருகின்றனர்.
கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் குறைந்த மதிப்பெண் எடுத்து விடுவோம் என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.