செல்போன் கேமால் வெறிபிடித்த மாணவன் - கை,கால்கள் கட்டி சிகிச்சைக்கு அழைத்து வந்த தாய்!
வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவன் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறி பிடித்த மாணவன்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காலிவாரி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் 18 வயதான கல்லூரி மாணவன் ஒருவர். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ படித்து வந்ததாக கூறப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் இவரின் தந்தை இறந்துள்ளார். இதனால் மாணவனின் அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி அனுப்பும் பணத்தில் தாய் இவரை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாணவன் வீட்டில் தனியாக இருக்கும்போது இரவு பகல் பாராமல் தினமும் அதிக அளவில் செல்போன் மற்றும் கணினியில் வீடியோ கேம் விளையாடி வந்துள்ளார்.
நேற்று வரை நன்றாக இருந்த மாணவன் திடீரென்று வெறி பிடித்தது போல் வீட்டில் உள்ளவர்களை அவதூறாகவும், ஆசாபாசமாகவும் பேசி அடிக்க முயன்றுள்ளார்.
மருத்துவர்கள் எச்சரிக்கை
மேலும் எதிரில் வருபவர்களை தாக்க முயன்றதால் அதிர்ச்சியடைந்த தாய், மகனின் கையை கயிற்றால் கட்டி சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு மருத்துவர்களை மிரட்டி சத்தம் போட்டுள்ளார் மாணவன்.
இதனால் மாணவனை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாணவனின் கை, கால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றும்போது எதிரில் இருந்த நபரையும் மாணவன் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து உறவினர் ஒருவரின் உதவியுடன் மாணவனை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளைகளிடம் செல்போன்களை கொடுக்கும் தாய்மார்களை எச்சரிக்கையாக இருக்கும்படி மன நல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.