பெற்றோரின் அலட்சியம்..மனமுடைந்த மாணவன் -35-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
கேளம்பாக்கம் அருகே 35-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேளம்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 40 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது . இதில் 35-வது மாடியில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த யங்கியூ லிம் - சுஜாங் சிங், தம்பதியினர் மற்றும் அவரது மகன் சினோ லிம் (வயது 15) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
சினோ லிம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் யங்கியூ லிம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் யங்கியூ லிம் கடந்த வாரம் தென்கொரியா சென்றுள்ள நிலையில் வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகன் மட்டும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் மாணவன் சினோ லிம் தான் வசிக்கும் 35-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனைப் பார்த்த காவலாளி அதிர்ச்சியடைந்து கேளம்பாக்கம் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
கடிதம்
அதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவன் கொரிய மொழியில் எழுதிய கடிதம் ஒன்றை வீட்டில் காவல்துறை கைப்பற்றினர்.
அதில் பெற்றோர்கள் சரியாகக் கவனிப்பதில்லை எனவும் தென் கொரியாவில் வசிக்கும் சகோதரியை மட்டும் பாசமாக கவனிக்கின்றனர் என வருத்தத்துடன் எழுதப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
பெற்றோர் தன்னை சரியாக கவனிப்பது இல்லை என கூறி பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)