மாணவர்கள் ஆல்பாஸ்- அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு
9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது - கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வைரஸ் தொற்று இருந்து வந்ததன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கூட மாணவர்கள் ஆன் லைன் வகுப்பில் சரியாக கவனித்து பாடம் கற்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
2020-21ஆம் கல்வியாண்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தக் கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9,10,11-ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.