நேற்று நடந்த +2 தேர்வில் 32,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை - வெளியான அதிர்ச்சி தகவல்
நேற்று தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறைக்கு வந்தனர். இத்தேர்வு வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுதினர். +2 மாணவர்களுக்கு வரும் 9-ம் தேதி (திங்கட்கிழமை) ஆங்கில தேர்வு நடைபெற உள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்கியது. நேற்று, சென்னை, சாந்தோமில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து 8,22,684 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில், முதல் நாளான நேற்று 32,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தேர்வின்போது ஒழுங்கீன செயல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.