உடல் எடை குறைக்க You Tube பார்த்து மருந்து சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு
மதுரையில் உடல் எடையைக் குறைக்க யூடியூப் பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகனின் மகள் கலையரசிக்கு தற்போது (வயது 19). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த மாணவி உடல் பருமன் அதிகமாக இருந்துள்ளார். இதனால் அவருடைய உடல் எடையைக் குறைக்க யூடியூப்பில் சில வீடியோக்கள் பார்த்து கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துகள் விற்கும் கடை ஒன்றுக்குச் சென்று வீடியோவில் கூறப்பட்ட பொருட்களை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

மருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளார். பின்னர் இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் கலையரசி செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து கலையரசியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் செல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மாணவி எந்த மாதிரியான நாட்டு மருந்தை உட்கொண்டார் என்பது பற்றி சம்பந்தப்பட்ட நாட்டு மருந்துக் கடையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விடயம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஒவ்வொருவருடைய உடல்நிலைக்கு ஏற்றவாறுதான் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
யூடியூபில் வரும் வீடியோக்களைப் பார்த்துவிட்டு மருந்துகளை எடுத்துக் கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எந்த ஒரு மருந்தும் மருத்துவர்களின் பரிந்துரையோடு உட்கொள்வது மட்டுமே பாதுகாப்பானது" என்று கூறியுள்ளனர்.