காரை ஓட்டிய பழகிய இளைஞர்கள் - கடைசியில் நிகழ்ந்த சோக சம்பவம்
திருப்பூரில் நண்பர்களுடன் கார் ஓட்டி பழகும் போது சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன்கள் தமிழ்வாணன், ஸ்ரீதர் இருவரும் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 11 மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இதனிடையே இவர்களது உறவினருக்கு சொந்தமான காரில் நண்பர்களான கோபி சங்கர், லெனின் ராஜ் ஹரி கிருஷ்ணன், தினேஷ் குமார் ஆகிய 6 பேரும் கார் ஓட்டிப் பழகுவதற்காக பல்லடம்-மங்கலம் சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது அம்மாபாளையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் வலது புறம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற 5 பேரையும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.