விடைபெற்றார் மாணவி ஸ்ரீமதி - உடல் அடக்கம்..!
மாணவி ஸ்ரீமதி உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாணவிக்கு இறுதி அஞ்சலி
கள்ளக்குறிச்சி மாணவி உடலை இன்று காலை மாணவியின் பெற்றோர் பெற்றுக்கொண்ட நிலையில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து உறவின் முறைபடி மாணவியின் தாய்மாமன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து தாய் மற்றும் தந்தை கதறலுக்கு இடையே மாணவிக்கு இறுதி சடங்குகளை மாணவியின் உறவினர்கள் செய்தனர்.
கண்ணீருக்கு மத்தியில் உடல் அடக்கம்
தொடர்ந்து மாணவியின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் கணேசன்,மாவட்ட ஆட்சியர்,ஊர் பொதுமக்கள் மற்றும் பல அரசியல் கட்சி உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் உடல் பெரியநெசலுார் கிராம மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சில சாஸ்திர முறைப்படி சடங்குகள் செய்த பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது மாணவியின் தந்தை, தாய், தாய் மாமன் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியது காண்போரை கண்கலங்க செய்தது.
மாணவியின் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் கணேசன் கலந்து கொண்டார்.
மாணவியின் உடலுக்கு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
பிறகு மாணவிக்கு பிடித்தமான உயிரியல் புத்தகமும் மாணவியின் உடலோடு சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது.