பள்ளிக்கே வராத மாணவன்; தேர்வறையில் தூக்கம்; எழுப்பிய ஆசிரியரின் முகம் கிழிந்து ரத்தம்!
தேர்வறையில் தூக்கியபோது எழுப்பிய ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கு வராத மாணவன்
ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் பயந்த காலம் போயி தற்போது மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பயப்படுகின்றனர். மாணவர்களை அடிக்கக்கூடாது என்று சட்டம் இருப்பதால், மாணவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆசிரியர்களை தாக்குவது, கெட்ட வார்த்தையில் திட்டுவது என மாணவர்களின் சேட்டை அத்துமீறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை திருவெற்றியூர் விம்கோ நகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் சேகர்(46) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது பள்ளியில் 2-ம் கட்ட பருவ தேர்வு கடந்த 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் மீது தாக்குதல்
இந்த நிலையில் அந்த பள்ளியில் 12ம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த 10 நாட்களாக மாணவன் பள்ளிக்கு வரவில்லை. தேர்வு எழுதாமலும் இருந்துள்ளார். இதையடுத்து மாணவரை அவரது தந்தை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரிடம் வருத்தம் தெரிவித்தார்.
பின்னர் அந்த மாணவரை வணிகவியல் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். தேர்வு அறையில் ஆசிரியர் சேகர் கண்காணிப்பாளராக இருந்தார். ஆனால் அந்த மாணவன் மட்டும் தேர்வு எழுதாமல் மேஜை மீது படுத்து தூங்கியுள்ளார். மாணவனின் அருகில் புகையிலை பாக்கெட் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கவனித்த சேகர் ஆசிரியர், மாணவனை தட்டி எழுப்பிய தேர்வு எழுதுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவன் பாய்ந்து ஆசிரியரின் முகத்தில் குத்தி, அவரை தள்ளிவிட்டு முகத்திலேயே மேலும் குத்தியுள்ளான். இதில் ஆசிரியரின் முகம் கிழிந்து ரத்தம் காட்டியுள்ளது.
ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.