ஆம்புலன்ஸில் வந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவன்
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள இசிஐ பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ரிஷிகேஷ்.
இவர் அசோக் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்தார்.
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற தமிழ் தேர்வுக்கு சென்றிருந்தபோது மாணவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
பின்னர் அவரின் பெற்றோர்கள் உடனடியாக கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது மாணவருக்கு அப்பெண்டிக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டு, கடந்த 12ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆங்கில தேர்வு எழுத்துவதற்கு அம்மாணவர் விருப்பம் தெரிவித்ததால், மருத்துவமனையில் இருந்து தேர்வு மையத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு மாணவருக்கு தனியாக தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர் கூறிய பதில்களை எழுத சொல்வதை எழுதுவோர் நியமிக்கப்பட்டனர்.
மூன்று மணி நேரம் தேர்வு எழுதிய பிறகு மாணவர் மீண்டும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகும் ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.