காதலியை இம்ப்ரஸ் செய்ய மாணவன் செய்த செயல்; பலியான மூதாட்டி - நடந்தது என்ன?
காதலிக்கு செல்போன் வாங்கித் தருவதற்கு மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிய கல்லூரி மாணவன் கைது
கடலூர் மாவட்டம் வேப்பூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி பட்டதாள். இவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் பட்டதாளை பார்க்க அவரது மகள் பார்வதி வீட்டிற்கு வந்து பார்த்தப்போது பட்டதாள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகள் இல்லாததால் தாயார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வேப்பூர் காவல் நிலையத்தில் மகள் பார்வதி புகார் அளித்தார்.
புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் சூர்யா என்பவர் மீது சந்தேகம் அடைந்ததால் அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கல்லூரி மாணவன் சூர்யா தனது காதலிக்கு புதிய செல்போன் வாங்கித் தருவதற்காக தனிமையில் இருந்த மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை திருடி அடகு வைத்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவனை கைது செய்தனர்.