செல்போன் வாங்க குழந்தையை கடத்திய மாணவர் கைது - கோவையில் அதிர்ச்சி சம்பவம்
புதுச்சேரியில் செல்போன் வாங்க பணம் இல்லாததால் எதிர் வீட்டு குழந்தையை கடத்தி பணம் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் திருக்கானூர் அருகே உள்ள மூங்கில்பட்டு கிராமத்தில் வசித்து வரும் அன்பழகன் என்ற விவசாயிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவர் உதயன் என்பவர் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.
இதனால் உதயன் குழந்தையை அடிக்கடி அருகில் இருக்கும் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று குழந்தையை தன்னுடைய பைக்கில் அமரவைத்து அவர் வெளியே சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் தன்னுடைய சட்டையை கிழித்துக் கொண்ட உதயன் நேராக திருக்கனூர் காவல் நிலையம் சென்றார். அங்கே பதறியடித்தபடி தன்னுடைய பைக்கில் குழந்தையை அழைத்து சென்றதாகவும், அய்யனார் கோயில் அருகே செல்லும்போது மர்ம நபர்கள் தன்னைத் தாக்கிவிட்டு குழந்தையை கடத்தி சென்றதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது கடத்தல் கும்பல் தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விசாரணையை தொடங்கிய ஆய்வாளர் கணேசன், உதவி ஆய்வளர் வேலு தலைமையில் உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பல்வேறு கடைகளுக்கு குழந்தையை உதயன் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து உதயன் மீதே சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்த அதை ஆய்வு செய்தனர்.
அதில் எதிர் தரப்பில் இருந்து யாரும் பேசியதாக தெரியவில்லை. சில நிமிடத்தில் அந்த செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய பெண் ஒருவர், "குழந்தையை என்னிடம் விட்டு விட்டு எங்கே சென்றாய்? எப்போது வருவாய்" எனக் கேட்டுள்ளார். பின்னர் போலீசார் அந்த பெண்ணிடம் லாவகமாக பேசி காவல்நிலயம் வரவழைத்தனர்.
தான் மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதை தெரிந்து கொண்ட உதயன், அந்த பெண்ணை தெரியாது என்றும் குழந்தையை வைத்திருக்கும் அந்த பெண் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிவித்தார்.
ஆனால் போலீசார் தங்களுடைய பாணியில் உதயனிடம் விசாரிக்க ஆரம்பிக்க அவர் உண்மையை ஒத்துக்கொண்டார். விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்க பணம் இல்லாததால் இந்த கடத்தல் நாடகத்தை நிகழ்த்தி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை மீட்கப்பட்டு தந்தை அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது.