காதல் விவகாரம்; மாணவி கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு தந்தை விஷம் குடித்து தற்கொலை
இளைஞர் ஒருவர் ரயில் முன் தள்ளி கல்லுாரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கொலை
சென்னையில் உள்ள கிண்டி ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி. இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவரின் குடும்பத்தினர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ராமலட்சுமியின் மகளான கல்லூரி மாணவி சத்யா (வயது 20), நேற்று பரங்கிமலை இரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் கல்லூரிக்கு செல்ல வருகை தந்துள்ளார்.
அப்போது, நடைமேடை எண் 1ல் மாணவியுடன் ஒருவன் நின்று பேசிக்கொண்டு இருந்த நிலையில், மெரினா கடற்கரை நோக்கி பயணம் செய்த மின்சார இரயில் வரும்போது மாணவியை இரயிலுக்குள் தள்ளிவிட்டு தப்பி சென்றான்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மாம்பலம் காவல் துறையினர், சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையாளி கைது
மேலும், இதுகுறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்தனர். அப்போது, அதே பகுதியில் காவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற தயாளன் என்பவரின் மகன் சதீஷ் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்தது அம்பலமானது.
கயவனின் காதலனை மாணவி ஏற்றுக்கொள்ளாத நிலையில், தொல்லைகள் தொடர்ந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எழுதியும் வாங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாணவிக்கு தொடர்ச்சியாக காதல் தொல்லை கொடுத்து வந்த சதீஷ், சம்பவத்தன்று மாணவியிடம் மீண்டும் காதலிக்க சொல்லி வற்புறுத்தி இருக்கிறான். அதனை ஏற்க மறுத்த மாணவி இரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தை விஷம் குடித்து தற்கொலை
இந்த சம்பவத்தில் மாணவியின் உடல் நசுங்கி, தலை துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். தப்பியோடிய சதீஷை தனிப்படை காவல் துறையினர் நள்ளிரவு நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் மாணவியின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி இருக்கிறார். மகளின் இறப்பு செய்தியை கேட்ட மாணவியின் தந்தை மாணிக்கமும் மாரடைப்பால் உயிரிழந்தார். என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.