தீபாவளி பண்டிகை - விதிகளை மீறி பட்டாசு வெடித்தால் பாயும் நடவடிக்கை!
விதிகளை மீறி பட்டாசு வெடித்தால் கடுமையான சட்டநடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தது.
விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188வது சட்டப் பிரிவின்படி 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது. தீபாவளி பண்டிகையின்போது தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது கடந்த 5 ஆண்டுகளாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் 188-ன் படி பதிவு செய்யப்படுகிறது.
நடவடிக்கை
தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-ன் படி வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
நேரக் கட்டுப்பாட்டையும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்ட தடையையும் அமல்படுத்துவது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்தனர். இதில் கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், மருத்துவமனை, வழிப்பாட்டு ஸ்தலங்கள், வணிக வளாகங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவதற்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.