ஆயுதத்தை எடுத்து வரக் கூடாது RSS ஊர்வலத்திற்கு கடும் நிபந்தனை - உயர்நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் 51 இடங்களில் RSS ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
நீதிமன்றத்தில் அனுமதி கோரி வழக்கு
சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கர் நுாற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி RSS இயக்கத்தைச் சேர்ந்த 9 நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வரும் 28ம் தேதிக்குள் பரிசீலித்து முடிவெடுக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஊர்வலத்தில் பின்பற்ற கடும் நிபந்தனைகளையும் விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.
பின்பற்ற வேண்டிய கட்டாய நிபந்தனைகள்
* ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரோ..எந்த ஒரு தனி நபர் குறித்தோ, ஜாதி மதங்கள் குறித்தோ தவறாகப் பேசக் கூடாது.
* தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பாக எக்கருத்தையும் வெளிப்படுத்தக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
* ஊர்வலத்தில் பங்கேற்கும் RSS தொண்டர்கள் காயம் ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது எவ்விதமான ஆயுதத்தையும் எடுத்துவரக் கூடாது.
* அனுமதிக்கப்பட்ட பாதையில் இடதுபுறமாக மட்டுமே அணிவகுப்பை நடத்த வேண்டும்.
* வழியில் நிறுத்தவோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது.
* சாலையின் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே அணிவகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.
* போக்குவரத்து, அணிவகுப்பை ஒழுங்குபடுத்த காவல்துறைக்கு உதவ போதுமான தன்னார்வலர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைத்திருக்க வேண்டும்.
* பெட்டி வகையிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது.
* மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற அமைப்பினரின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது.
* பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் செலவை திருப்பி செலுத்துவதற்கான உறுதிமொழி, இழப்பீடு, அல்லது மாற்றுச் செலவுகளை திருப்பி அளிக்க உறுதி மொழி ஏற்க வேண்டும். உள்ளிட்ட கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
* நீதிமன்ற கட்டுபாடுகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் காவல்துறையினர் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.