போலீசார் முன்னிலையில் விரட்டி விரட்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர் - பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

pmmodi tnbjp பாஜக பிரதமர் மோடி punjabissue
By Petchi Avudaiappan Jan 12, 2022 04:14 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பிரதமர் மோடியை விமர்சித்ததாகக் கூறி பல்லடத்தில் தள்ளுவண்டி வியாபாரியை பாஜக நிர்வாகிகள் போலீசார் முன்னிலையிலேயே கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமர் மோடி அண்மையில் பஞ்சாப் மாநிலம் சென்றிருந்தார். சாலை மார்க்கமாக சென்ற அவரின் காரை மறித்த  விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் வாகனம் 20 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது. பின்னர் பஞ்சாப் நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ரத்து செய்தார். டெல்லி திரும்புவதற்கு முன்னதாக நான் உயிரோடு திரும்பியதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்க என பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து திட்டமிட்டே பஞ்சாப் மாநில அரசு மோடிக்கு எதிராக சதி செய்தது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பல்லடத்தில் இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். 

அப்போது அப்போது தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்தாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கினர். அவர் உயிருக்கு அஞ்சி அருகே இருந்த ஒரு கடைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார். கடையின் உள்ளேயும் வெளியேயும் போலீசார் நின்று கொண்டனர். வெளியே நின்ற போலீசார் பாஜகவினர் டேய்! வெளியே வாடா! வாடா என குரல் எழுப்பிக் கொண்டிருந்ததால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். 

ஆனாலும் சில பாஜக நிர்வாகிகள் போலீசாரையும் மீறி கடைக்குள் நுழைந்து தள்ளுவண்டி வியாபாரியை கொடூரமாக தாக்கினர். இதில் அதே இடத்திலேயே அந்த வியாபாரி நிலைகுலைந்து விழுந்தார். பொதுமக்கள் மற்றும் போலீசார் முன்னிலையிலேயே பாஜகவினர் கொடூரமாக தாக்கியதை கண்டு அங்கிருந்த பெண்கள் அழுது ஓலமிட்டபடி அலறி ஓடினர்.

பின்னர் தாக்குதலுக்கு உள்ளான வியாபாரியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பதும் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. தாம் மோடியை விமர்சிக்கவிலை என்றும் தள்ளுவண்டியை நகர்த்த முடியாமல் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அதனால் போராட்டம் முடிந்து விட்டதே நகருங்கள் என சொன்னதாகவும் அந்த ஆத்திரத்தில்தான் பாஜகவினர் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.