பிரிட்டனை தாக்கிய சக்திவாய்ந்த புயல் - 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
பிரிட்டனில் யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வரும் பிரிட்டனில் அடுத்ததாக இயற்கை சீற்றம் தாக்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யூனிஸ் என்ற புயல் வீசி வருகிறது. இதனால் கடுமையான காற்று வீசுவதுடன், புழுதி மற்றும் பல்வேறு கழிவுப்பொருட்கள் காற்றில் பறப்பதோடு கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் புயல் தாக்கியபோது வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது. புயல் காரணமாக பேருந்து மற்றும் ரெயில் சேவைகள், விமானங்கள் மற்றும் படகுப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அங்கு வானிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் 10 கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் புயல் இன்று வடக்கு ஜெர்மனியைத் தாக்கும் என்றும் இரவில் கிழக்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஜெர்மனியின் வடக்கு கடலோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.