இது லாபம் பார்ப்பதற்கான நேரம் இல்லை - கொரோனா தடுப்பூசி விலையேற்றம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள் விலையை குறைக்க வேண்டும் என்றும் இது லாபம் பார்ப்பதற்கான நேரம் இல்லையென்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. நேற்று இதுவரை இல்லாத அளவாக 3.5 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தினசரி மரணங்களும் மூன்றாயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளோடு ரஷ்யாவின் ஸ்புட்நிக் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் சில தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை வெளி சந்தையில் விற்றுக்கொள்ளலாம் என்றும் விலையை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து சீரம் நிறுவனம் தன்னுடைய தடுப்பூசியின் விலையை பல மடங்கு உயர்த்தியிருந்தது. தற்போது பாரத் பயோடெக் நிறுவனமும் தன்னுடைய தடுப்பூசியின் விலையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.
இதனை முந்தைய விலையான ரூ.150ற்கு வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தடுப்பூசி நிறுவனங்கள் வாழ்நாள் முழுவதும் லாபம் பார்க்கலாம், இது லாபம் பார்ப்பதற்கான நேரம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.