மறியல் போராட்டத்தின் போது வாகனங்கள் மீது கல்வீச்சு - 200 இளைஞர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எருது விழா நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல் வீசிய 200 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாலை மறியல் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டன.
அப்போது அங்கு வந்த போலீசார் எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கொடுக்கவில்லை எனவே கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் ஓசூர் முழுவதும் எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டங்களை நடத்தினர்.
200 இளைஞர்கள் கைது
இதையடுத்து நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 15 கிமீ துாரத்திற்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு நின்ற அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த அதிவிரைவுப்படை போலீசார் போராட்டக்காரர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த நிலையில் வாகனங்கள் மீது கற்கள் வீசி போராட்டத்தில் ஈடுபட்ட 200 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.