கால்வாயில் வீசிய துர்நாற்றம் - எட்டிப்பார்த்தபோது சூட்கேசில் சடலமாக கிடந்த இளம்பெண் - திருப்பூரை உலுக்கிய சம்பவம்
திருப்பூர் மாவட்டம், பொல்லிக்காளி பாளையம் அருகே சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயிலிருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் கழிவுநீர் கால்வாயை எட்டிப் பார்த்தபோது ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு கிடந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.
அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சூட்கேஸில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருந்தது. அந்த சடலத்தை போலீசார் சோதனையிடுகையில், நெற்றியில் பொட்டு, கையில் வளையல், காதில் தோடு இருந்தது. வலது கை, தலையின் பின்புறம் காயங்கள் இருந்தது.
கழுத்தை நெரித்த அடையாளமும் இருந்தது. அப்பெண்ணின் கையில், குயின் என்ற ஆங்கில எழுத்துக்களால் பச்சை குத்தப்பட்டிருந்தது. அப்பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தப் பெண் வட மாநிலத்தைச் சேர்ந்தவரா என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுதது, துணை கமிஷனர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சூட்கேஸ் கிடந்த இடத்தின் அருகே இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி கேமராவில், கடந்த 6ம் தேதி இரவு, பெருந்தொழுவு ரோடு வழியாக தாராபுரம் சாலை நோக்கி பைக்கில் இரண்டு பேர் சந்தேகப்படும் விதமாக சென்றது தெரியவந்தது.
சிசிடிவி கேமராவில் பார்க்கும் போது பைக்கில் வந்த 2 பேர் சூட்கேஸ் பெட்டியை கால்வாயில் வீசி மீண்டும் அதே சாலையில் திரும்பி சென்றது பதிவாகி இருந்தது.
விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், உயிரிழந்த அப்பெண்ணின் பெயர் நேகா என்பதும், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், 2 ஆண்களுடன் அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது.
அவருடன் தங்கியிருந்த 2 ஆண்கள் அபிதாஸ், ஜெய்லால் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 3 பேரும் திருப்பூரில் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். திருப்பூர் பின்கோடு கேஎம்சி பகுதியில் கடந்த ஒரு மாதமாகத் தான் வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பெண்ணுடன் தங்கியிருந்த நபர்கள், வீட்டை காலி செய்வதாக கூறி விட்டு திடீரென்று பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
அதற்கு முன்னதாக யாருக்கும் சந்தேகம் வராதபடி கொலை செய்யப்பட்ட பெண்ணை சூட்கேசில் வைத்து எடுத்துச் சென்று கால்வாயில் வீசியுள்ளனர். அப்பெண்ணுடன் தங்கியிருந்த அந்த இரு நபர்கள், வடமாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்திருக்கிறார்கள்.