World Cup: அந்த 2 அணிகளை ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம் - ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படை!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது இந்த தொடரில் மிகவும் கடினம் என்று நினைப்பதாக ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் லீக் சுற்று தற்போது லீக் சுற்றுப் போட்டிகளின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. தற்போது 3வது மற்றும் 4வது இடங்களுக்காக கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணியும், அதேபோல் இனிவரும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும் என்ற முனைப்புடன் விளையாட இருக்கிறது. எனவே இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
இந்நிலையில் இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது "நிச்சயம் நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
இன்றைய போட்டி எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமைய உள்ளது. நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் என்று நினைக்கிறேன்.
முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது இந்த தொடரில் மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்" என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.