அனைவரும் பத்திரமாக இருங்கள்..சென்னை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - டேவிட் வார்னர்
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 48 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கன மழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதாலும் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி நீர் தேக்கம் ஆகியவை முழுமையாக நிரம்பி இருப்பதாலும் ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.
அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னையின் பல்வேறு இடங்களிலும் தேங்கிய மழைநீர் முழுமையாக வடியாததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது.
பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தேங்கிய மழை நீரை அகற்ற முடியாததால், பொதுமக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் படகுகள் மூலம் அவர்களை மீட்டு வருகின்றனர்.
சென்னையில் கன மழையின் போது கார்கள் மற்றும் வாகனங்கள் அடித்து செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
கிரிக்கெட் வீரர் வேண்டுகோள்
இந்த வீடியோவில் ஒன்றை பதிவிட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், வாய்ப்பு இருப்பவர்கள் அனைவரும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் என் நினைவில் உள்ளீர்கள். அனைவரும் பத்திரமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உதவும் நிலையில் யார் இருந்தாலும் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபடவும், உதவிக்கரம் நீட்டவும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் இணைந்து நம்மால் ஆன உதவிகளை செய்வோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.