சச்சினுக்கு வைக்கப்பட்ட சிலைக்கு ஸ்டீவ் ஸ்மித்தை வாழ்த்தும் ரசிகர்கள் - எதற்காக?
வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு திறக்கப்பட்ட சிலைக்கு ரசிகர்கள் பலரும் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாழ்த்தி வருகின்றனர்.
சச்சினுக்கு சிலை
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் (50). பேட்டிங்கில் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் தனது 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில், டெஸ்ட் (51), ஒரு நாள் (49) அரங்கில் 'சதத்தில்' சதம் விளாசிய ஒரே வீரர் ஆவர்.
இவர் கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றார். இவர் இந்திய அரசின் பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார். இந்நிலையில் சச்சினை கவுரவிக்கும் விதமாக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சார்பில் , மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த புதன்கிழமை அவருக்கு சிலை திறக்கப்பட்டது.
இது சச்சின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து சச்சின் தெரிவித்துள்ளதாவது "எனக்கு 10 வயது இருக்கும் போது, எனது நண்பர்களுடன் வான்கடே ஸ்டேடியத்தின் வடக்கு ஸ்டாண்டிற்கு வந்தேன். அன்று முதல் எனது சிலை திறப்பு விழா வரையிலான பயணம் மறக்க முடியாதது என்றார்.
ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாழ்த்து
இவ்வளவும் இருக்க, அந்த சிலை தொடர்பாக புதிய குழப்பம் எழுந்துள்ளது. சிலையை பார்த்த பலரும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் அந்த சிலை பக்கவாட்டில் இருந்து பார்க்க அப்படியே ஸ்டீவ் ஸ்மித் போலவே இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.
சமூக ஊடங்கங்களிலும் கேலி, கிண்டல்கள்,ட்ரோல்கள் பறந்தன. மேலும் இணையவாசிகள் பலரும் 'சிலைக்கு வாழ்த்துக்கள்' என ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படியாக விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அந்த சிலையில் ஏதும் மாற்றம் செய்வார்களா? அது சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.