நீட் பெயரில் கல்லா கட்டுவது கோச்சிங் சென்டர்கள்தான்: ஏ.கே.ராஜன் குழு அறிக்கை
நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம் என ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் முதல் தலைமுறை படிப்பவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது.
அதே போல் நீட் கோச்சிங் என்ற பெயரில் குறுகிய கால பயிற்சிக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும், நீண்ட கால பயிற்சிக்கு ரூ.60,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், நீட் தொடர்ந்தால் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்படும் என்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாகுறை ஏற்படும் சூழல் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் மாணவர்கள் அடையும் பலனைக் காட்டிலும் கோச்சிங் சென்டர் நிறுவனங்களுக்கு தான் அதிகம் பலன் என்பதை இந்த அறிக்கை சூசகமாக வெளிப்படுத்திவிட்டது.