ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம்
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் கடிதத்தை திமுக எம்.பி டி.ஆர்.பாலு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.
அதில் தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பேரறிவாளன் அவர்களுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எழுவர் விடுதலை விவகாரத்தில் இது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
அந்தக் கடிதத்தில், ”முப்பது ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும். தமிழக மக்களின் விருப்பமும் அதுவே. ஏற்கனவே தமிழக அமைச்சரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது.
ஆனால் ஆளுநர் சிபிஐ-ன் பன்னோக்கு விசாரணை குழுவின் விசாரணை எஞ்சிருப்பதை காரணம் காட்டி அவர்களை விடுதலை செய்ய மறுத்துள்ளார். அதற்கும் எழுவர் விடுதலைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என மத்திய அரசும் சிபிஐ-ம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றன.
எனவே ஆளுநர் குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் இருக்கிறது எனக் கூறியுள்ளார். எழுவரும் சிறையில் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே தற்போது உள்ள கொரோனா சூழலையும் கருத்தில் கொண்டு எழுவரையும் விடுதலை செய்ய விரைந்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.