தமிழகத்திலே தடுப்பூசி உற்பத்தி - தமிழக அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்குகின்ற தடுப்பூசிகள் போதாது என்பதால் சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான HLL பயோடெக் தடுப்பூசி தொழிற்சாலையையும் தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலை தற்போது இயங்காமல் இருந்து வருகிறது. இங்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து HLL பயோடெக் தடுப்பூசி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தற்போது இந்த தொழிற்சாலையை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு எடுத்திருப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.