தமிழகத்திற்கு தாமதிக்காமல் தடுப்பூசி வழங்குங்கள் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழக அரசு ஒரு கோடி தடுப்பூசி கேட்டிருந்த நிலையில் 42 லட்சம் தடுப்பூசி டோஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு உடனடியாக 50 லட்சம் தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜூன் மாதத்திற்கான தடுப்பூசியை முதல் வாரத்திலேயே வழங்கினால் தடுப்பூசி போடும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வசதியாக இருக்கும்.பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்தது போல தமிழகத்துக்கும் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் “என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், “செங்கல்பட்டில் இருக்கும் HLL பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கக்கோரி ஏற்கனவே உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
தமிழக அரசே ஏற்று நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்ததற்கு மத்திய அரசே நடத்த இருப்பதாக பதிலளித்துள்ளீர்கள். மத்திய அரசு நடத்தினால் என்ன. மாநில அரசு நடத்தினால் என்ன தேசத்தின் சொத்தானசெங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் கூடாது. தமிழக அரசின் முழுமையான ஆதரவு உண்டு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

