திமிராக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்கும் - ஸ்டாலின் எச்சரிக்கை

Ministry of Education M K Stalin Shri Dharmendra Pradhan Tamil nadu
By Karthikraja Feb 16, 2025 07:30 AM GMT
Report

ஒன்றிய கல்வி அமைச்சரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்மொழி கொள்கை

மத்திய அரசின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துவதுவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். 

mk stalin

இந்த திட்டத்தில் இணைந்தால் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால்  இதை எதிர்த்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தர்மேந்திர பிரதான்

இந்த திட்டத்தை ஏற்காததால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டுக்கான பங்களிப்பாக தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று(16.02.2025) இது குறித்து பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தேசியக் கல்வி கொள்கையின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களது தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் 3வது மொழியாக இந்தியையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ்நாடு மட்டும் இதனை ஏன் ஏற்க மறுக்கிறது? 

தர்மேந்திர பிரதான்

விதிகளின்படி 3வது மொழியை ஏற்க வேண்டும். ஏற்க முடியாது என்று சொல்வது தவறு. அதனை ஏற்கும் வரை விதிகளின்படி, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது. தமிழ்நாடு ஏன் இதனை ஏற்க மறுக்கிறது என்றால், இதனை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள்" என பேசினார்.

மு.க.ஸ்டாலின்

மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! 

"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்" என தெரிவித்துள்ளார்.