ஸ்டாலின் ஒன்றுமே தெரியாத தலைவராக உலா வருகிறார் – முதல்வர் எடப்பாடி!
ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மதுரை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு, வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார் எடப்பாடி.
மேலூரில் பிரச்சாரம் செய்த போது அவர் பேசுகையில், ”நாங்கள் விவசாயிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன செய்யப்போகிறோம் என்பதைச் சொல்கிறோம். ஆனால், ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் என்னையும், அமைச்சர்களையும் பற்றி மட்டுமே பேசுவதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார். அவரிடம் சரக்கு இல்லை. ஒன்றுமே தெரியாத தலைவராக உலா வந்து கொண்டிருக்கிறார்.

நான் விவசாயி என்று சொன்னாலே ஸ்டாலினுக்குக் கோபம் வந்து விடுகிறது. நான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயி என்று சொல்கிறேன். அதில் உங்களுக்கு என்ன கோபம்? தமிழகத்தில் 3 லட்சத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 304 புதிய தொழிற்சாலைகள் வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவை வந்தால் படித்த இளைஞர்கள் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக வேலை கிடைக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு யாரும் கிடையாது. அவர்களுக்கு நாம் தான் வாரிசு. நாம் தான் இந்தக் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்” என்றார்.