‘மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் மகனைப் பற்றி தான் ரொம்ப கவலை’ – அமித்ஷா
திமுக, காங்கிரஸ் கட்சிகள் குடும்ப அரசியல் செய்து வருகிறது என்றும், அவர்களுக்கு தங்களது குடும்பத்தை தவிர மக்கள் மீது அக்கறை கிடையாது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் அமித்ஷா பேசியதாவது, "ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணி மகத்தான வெற்றி அடையும். எம்.ஜி.ஆர் வழியில் ஜெயலலிதா தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். அவரை தொடர்ந்து மோடியின் வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்.

தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என திமுகவை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியை தரக்குறைவாக பேசி வருகிறார்கள். முதல்வரின் தாயாரை பற்றி ஆ.ராசா கடுமையாக பேசியிருக்கிறார். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியைப் பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும் மட்டும் தான் கவலை. அவர்கள் தமிழக மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை.
பிரதமர் மோடி, சோனியா காந்தி, ஸ்டாலினை போன்றவர் கிடையாது. தமிழக மக்கள் மீது அன்பும், பாசமும் வைத்துள்ளார்.
தமிழக மக்கள் பற்றி மோடியை விட யாரும் அதிகமாக கவலைப்பட முடியாது. ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் திமுகவும், காங்கிரஸும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள்" என்றார்.