நாளை ஸ்டாலின், உதயநிதி அமைச்சரவையிலும் நான் கண்டிப்பாக இருப்பேன்: துரைமுருகன் பேச்சு
முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தான், அடுத்து மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெறப் போவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்.6 அன்று சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள், பிரச்சாரப் பணிகள், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சென்னை கொளத்தூரில் நேற்று நடைபெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில், "கருணாநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன் இருந்தான்.
ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருப்பான், நாளை உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பான். எனக்கு ஒன்றும் இல்லை. என்னை வளர்த்தவர் கருணாநிதிதான். எங்கோ இருந்த என்னைக் கொண்டு வந்து 2 கோடி தொண்டர்கள் உள்ள இக்கட்சியின் பொதுச் செயலாளராக அமர வைத்திருக்கிறார். இது போதாதா என்று பேசியுள்ளார்.